ஞாயிறு, 23 நவம்பர், 2025

வேதனை

 

வேதனை

            யாழ், யாழோட அம்மா, நான் மூவரும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துக்குச் சென்றிருந்தோம். யாழின் அம்மா அவர்களது நெறியாளரைச் சந்திப்பதற்காகத் துறைக்குச் சென்றுவிட்டார்கள் வெளியில் இருந்த மரத்தடியில் யாழுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த மாணவர்கள் யாழிடம் வந்து பேசினர். யாழும் மழழை மொழியில் அவர்களுடம் பேசினாள். அனைவரும் அவளது பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர். பல்கலைக் கழக நூலகத்திற்கு அழைத்துச் சென்றேன். ஏதேதோ புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். அப்பா இதப் படிங்கப்பா என்று அடுத்தடுத்து பல புத்தகங்களை எடுத்துக்கொடுத்தாள். வெரிக்குட் நல்ல புத்தகம் என்று கூறி அவளை மேலும் நூல்களை எடுக்கச் சொன்னேன். அப்படியே பொழுது சென்றது. குழந்தைக்குப் புத்தகத்தின் தூசிகள் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடலாம் என்று யோசித்து நூலகத்திலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். அவளது அம்மா வேலைகளை முடித்துக்கொண்டு வெளியில் வந்தாள். இருவரும் மகிழ்ந்தோம். சாப்பிடுவதற்குச் சென்றோம். மகிழ்வாய்ச் சாப்பிட்டோம். மெதுவாய் நடந்து சென்றோம்.

            வண்டிகள் ஏதும் வரதா சாலை என்பதால் யாழின் கையை நான் பிடித்துக்கொள்ளவும் இல்லை. அங்குள்ள செடிகளைத் தொட்டுப்பார்த்து விளையாடும் ஆர்வத்தால் யாழ் என்னை தூக்கச் சொல்லவும் இல்லை. எங்களுக்கு முன்னாள் யாழ் சென்று கொண்டிருந்தாள். விளையடிக்கொண்டே சென்றாள் குழந்தை. நாங்கள் பேசிக்கொண்டே நடந்தோம். சாலையில் விளையாடிக்கொண்டே சென்ற யாழ் தார்ச்சாலையில் நடந்தாள்..... சற்று வேகமாக நடந்தாள்..... என்ன தோன்றியதோ அவளுக்கு ஓடித்தொடங்கினாள். மெதுவாடா மெதுவாடா என்று சத்தம் போட்டேன். என் குரலைகேட்டும் குழந்தை வேகமாக ஓடினாள். ஓடியவள்....... சிறிது நேரத்தில் தார்ச்சாலையில் விழுந்தாள். அவளது கால் தடுக்கிவிட்டு விழுந்தாள். புதிதாய்ப் போடப்பட்டிருந்த தார்ச்சாலை குழந்தை முகத்தைத் தார்ச்சாலையில் அழுந்தும் படி விழுந்தாள். எனது தலையே வெடிப்பது போல் இருந்தது. பெரிதாகக் கத்தினேன். வேகமாய் ஓடினேன். குழந்தையைத் தூக்கினேன். குழந்தையின் நெற்றியில், மூக்கில், உதடுகளில் பற்களில் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம்...... என்னால் ஏதும் செய்யவில்லை எனது கைக்குட்டையை எடுத்துத் துடைத்தேன். யாழின் அம்மா தண்ணீர் தந்தாள் கைக்குட்டையை நனைத்து முகத்தில் வைத்து அழுத்தினேன். குழந்தையின் ரத்தமும் அழுகையும் என்னை மிகவும் பாதித்தது. நானும் அழத்தொடங்கினேன். என்ன செய்வதென்று புரியவில்லை. ஏதேனும் ஆட்டோ, கார் என்று தேடினேன். எதுவும் இல்லை. எங்கள் நிலையைப் புரிந்துகொண்ட இரண்டு மாணவர்கள் இரண்டு வண்டிகளில் வந்து நின்றனர். யாழைத் தூக்கிக்கொண்டு நான் ஒரு வண்டியில் ஏறிக்கொள்ள யாழின் அம்மா மற்றொரு வண்டியில் ஏறிக்கொள்ள அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு மருத்துவர்கள் இல்லை. செவிலியர் இருந்தனர். உள்ளே அழைத்துச் சென்றனர். ஏதோ மருந்தைத் தடவினர். என் குழந்தை மிகவும் பயந்தாள் தோளோடு அணைத்துக்கொண்டு அழுதபடியே கட்டிலில் உக்காந்தேன். செவிலியர் என்னை திட்டினர். குழந்தையை இங்கிட்டுக் காட்டுங்கள் என்றுரைத்தேன். குழந்தைக்கு எனது வாய் மட்டும் ஆறுதல் கூறியது. ஒன்னும் இல்லையடா ஒன்னும் செய்யாதுடா.... பொறுத்துக்கோம்மா என்றேன். அப்பா அழாதீங்கப்பா என்றாள் யாழ். எனக்கு என் பெண் என் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம் அப்போது புரிந்தது. சரிம்மா சரிம்மா என்று சொல்லிக் கொண்டே அழுதேன். வேறு மருத்துவமனைக்குச் சென்று விடலாம் என்று முடிவெடுத்தேன். எங்களை அழைத்து வந்த மாணவர்கள் விடைபெற்றார்கள் அவர்களது கைகளைப்பிடித்து அவர்களுக்கு நன்றி கூறினேன். மருத்துவமனையில் மருத்துவர் இல்லையா என்று அம்மாணவர்கள் செவிலியரிடம் மிகவும் கோபமாகக் கேட்டார்கள். எல்லா இடத்தில் இப்படித்தானே இருக்கும் என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். மருத்து முடித்து முகத்தில் சில பிளாஸ்டர்களுடன் வீட்டிற்கு வந்தோம். வரும் வழியில் என் மகள் அப்பா வீட்டுக்கு வேண்டாம்பா என்றாள். ஏம்மா என்று கேட்டேன். அம்மாச்சித் திட்டுவாங்கப்பா என்றாள். எனக்கு மிகவும் அழுகை வந்தது. அப்படியெல்லாம் திட்டமாட்டாங்கம்மா. அப்பா இருக்கன்ல சும்மா போவோம்டா என்று ஆறுதல் கூறி அழைத்து வந்தேன். வீட்டுக்குள் சென்று படுக்க வைத்து ஒரு நிமிடம் கூட என்  மகளை விட்டுப் பிரியாமல் அவளுக்கு அருகிலே இருந்தேன் என்னை அணைத்துக்கொண்டாள் என் மகள்.

            அப்பவே சொன்னேன். அந்த செப்பலைப் பிள்ளைக்குப் போடாதீங்கன்னு. கேக்காம போட்டீங்க. இப்ப பிள்ளை விழுந்துட்டு வந்திருக்கா. என்றார்கள் யாழின் அம்மாச்சி. உண்மைதான் நான் தான் என் மகள் விரும்பி அணிந்துகொண்ட ஜீன்ஸ் பேண்டுக்கு ஏற்ப இந்த செருப்பு நன்றாக இருக்கும் என்று மாட்டிவிட்டேன். என் மகளுக்கும் ரொம்ப பிடித்திருந்தது. சாலையில் அவள் நடந்து செல்லும் போது அது அவளுக்கு அழகாகவே இருந்தது. சும்மா வீட்டுல விளையாடிக்கிட்டு இருந்த பிள்ளையைக் கூட்டிக்கிட்டுப் போய் இப்படி விழுக வைத்துக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க என்ன இது. இது யாழின் தாத்தா... அவர்களின் மொழிகள் என்னை மிகவும் காயப்படுத்தின.

            என் தான் விழுந்துவிட்ட செய்தியை யாருக்காவது கூறினாள் அதற்காகப் பெரிதும் வருத்தப்பட்டாள். அப்பா யாருட்டையும் சொல்லாதீங்கப்பா என்றாள். சரிம்மா என்று கூறினேன். யாராவது பார்க்க வந்தாள் முகத்தை திருப்பிக்கொண்டாள். யாரும் தன்னைப் பார்க்க வருவதை அவள் விரும்பவில்லை. என் மகள் முகம் மீண்டும் பழையபடி வர வேண்டும். ஏதேனும் தழும்புகள் வந்துவிடுமோ என்று மனதுக்குள் நினைத்துத் துடித்துக்கொண்டிருந்தேன். மருத்துவர்களிடம் எனது வேண்டுதலைத் தெரிவித்தேன். ஒவ்வொரு நாளும் இதில் கவனம் செலுத்தினேன். என் மகள் விழுந்ததை எப்போது நினைத்தாலும் என் மனதில் ரத்தம் சொட்டுவதில்லை வடிந்தோடுகிறது. குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்கள்  சந்திக்கும் வேதனைகள் பிள்ளைகளுக்குத் தெரியாமலே போய்விடுகிறது. அது எப்போதாவது தெரியுமா என்றால் தெரியும். நாம் பெற்றோராகி நம் பிள்ளைகளை வளர்க்கும் போது தெரியும். பெற்றோர் கடவுள் தாங்கள்.

 

 

 

கருத்துகள் இல்லை: