வெள்ளி, 29 அக்டோபர், 2010

மழை



கருவாச்சி பெற்றெடுத்த
காவியங்கள்

சிறு தூரல்களும்
சின்னச் சினுங்கள்களும்
எந்தன் பிறப்பின் அடையாளங்கள்

வான்புகழும் வள்ளுவன்
எங்களை வணங்கினான்
எங்கள் முதல் வணக்கம்
அவனுக்கு

மேட்டுக்குடியும்
பள்ளப் பகுதியும்
பார்ப்பதில்லை
சாக்கடையானாலும்
சந்தனமானாலும்
சலனப்படுவதில்லை
எல்லோர் பொருட்டும் பெய்கின்றோம்
எதற்காக
நல்லோர் பொருட்டு என்றீர்கள்?

கருப்பாக இருந்தாலும்
சிவப்பாக இருந்தாலும்
கட்டித்தழுவிக் காதலிப்போம்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று காட்டும்
பழக்கம் எங்களிடம் இல்லை
கருப்பில் கலந்தால் கருப்பாவோம்
சிவப்பெனில் சிவந்து நிற்போம்
விட்டுக்கொடுத்து பெற்றுக் கொள்வதில்
எங்களைவிட நீங்களா
உயர்ந்தவர்கள்?

வராவிட்டால் துடிக்கின்றீர்கள்
வந்துவிட்டாலோ குடைபிடிக்கின்றீர்கள்?
ஏங்கிய உங்களுக்காக
இறங்கி வந்த எங்களைக்
கதவடைத்து வரவேற்பதுதான்
உங்கள் பண்பாடா?

புல்லும் பூவும்
மண்ணும் மரமும்
காயும் கனியும்
எங்கள் தாலாட்டில்
தலைகவிழ்ந்து நிற்பதைப்
பார்த்ததில்லையா?

எங்கள் வரவுக்காக
வாசல் வந்த தவளைகள்
எங்கள் உறவுக்காக
ஏங்கியிருந்த குவளைகள்
இவைகளை விட்டுவிட்டு
சின்னத் தூரலுக்கே
ஜன்னல் அடைக்கும்
ஜனங்களே
உங்களையா விரும்புவோம்?

கூரை வீட்டில் ஒழிந்துகொண்ட
எங்கள் கூட்டாளியைக்
கூரை பிரித்துக் கண்பது
எங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு

சிறிதாகத்தான் தொடங்குவோம்
சீரினால்
இந்த உலகையே
எங்களுக்குள் விழுங்குவோம்

பள்ளம் நோக்கிப் பாய்வதே
எங்கள் கொள்கை
கட்டுக்காகவும் கட்சிக்காகவும்
மாறும் இழிவு
எங்களிடம் இல்லை

எங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்
பட்டுத்தெறித்துக் கொண்டாலும்
பாசத்துடன் கூடியே இருப்போம்
நீர் அடித்து நீர் விலகுவதில்லை
எனும் வாக்கை
நீர் அறிந்ததில்லையா?

பெய்யும் பொழுதில் மழை
அடித்துச் செல்லுகையில் ஆறு
விழுந்தால் அருவி
ஓரிடத்தில் குவிந்தால் குளம்
இவை எல்லாம் கலந்தால்
கடல்
இது எங்கள் ஒற்றுமைக்கான
அடையாளங்கள்

எங்கள் கூட்டணிக்குக்
கிடைத்த வெற்றி
எழுபத்தோர் சதவீதம்
விட்டுவைத்துள்ள விழுக்காட்டை
விழுங்குவதற்கு
வினாடிகள் போதும்
வீணாக விளையாடதீர்கள்

கடவுளைக் கற்பித்த கயவர்களே
உங்களால்தான்
எங்கள்
காவிரியும் கங்கையும்
கலங்கப்பட்டது
கலங்கப்படுத்திய உங்களுக்கு
புனிதமா
என்ன நியாயம் இது?

மாதம்
மும்மாரிதான் பொழிந்தோம்
நீங்களோ
எங்கள் மீது
வசைமாறிப் பொழிந்தீர்கள்
நச்சுப்புகையை
எங்கள்
தொப்புள் கொடிச் செந்தங்களை
தூரோடு சாய்த்துத்
தரையோடு போடடீர்கள்
இன்று
மாறிமாறி முயன்றாலும்
மாரியாகப் பொழிய முடியாது
மாற்றிவிட்டீர்கள்

விண்ணையும் மண்ணையும்
ஊசி கொண்டு தைக்கும்
வித்தை தெரியுமா உங்களுக்கு?
காற்றோடு கலந்து பேசும்
கலைகள் தெரியுமா உங்களுக்கு?

உள்ளங்கையும் நனையாத
குளியல் எதற்கு
உள்ளமும் குளிரும்படி
எங்களுடன் உறவாடுங்கள்
வந்து நனைந்து பாருங்கள்
அழுக்கு மட்டுமல்ல
அங்கே குடிகொண்ட
அகந்தையும் அகன்றோடும்

கருத்துகள் இல்லை: