வெள்ளி, 29 அக்டோபர், 2010

மரம்

உதிரும் இலைகூட
உங்கள்
உணர்வைத்தட்டவில்லையா?

காய்ந்த சருகும்
கானம் இசைப்பது
உங்கள்
காதில் விழவில்;லையா?

இங்கு
பாம்புக்கும் இடமுண்டு
பச்சிளங் குருவிக்கும் இடமுண்டு
உச்சி சுடும் வெயிலிலும்
உள்ளம் குளிரும் சுகமுண்டு

பச்சி பறவைகளின்
பாரத கண்டங்களாவோம்
இதை
மெச்சி மதிக்காத மனிதர்களுக்கு
விறகுத் துண்டுகளாவோம்

கல்லால் எறிந்தாலும்
கனியாய் விழுவோம்
மண்ணில் புதைத்தாலும்
மீண்டும்
மரமாய் முளைப்போம்

பல நூறு ஆண்டுகளாய்
பக்குவமாய் வளர்ந்த போதும்
சில நூறு நொடிகளில்
சிதைக்கிறதே உங்கள் கரம்

மரம் தந்த மகத்துவத்தை
மறந்துவிட்ட மனிதர்களே!
மரண தண்டனை தந்தவர்களே!
உங்களை
மன்னிப்பது எங்கள் குணம்
ஆனால்
மன்னிக்காது உங்கள் இனம்


இதயமற்ற மனிதர்களே!
உங்களின்
ஆடாத ஆட்டத்தால்
அழிவது
நாங்கள் மட்டுமல்ல
ஆண்டவனும் தந்திடாத
உங்களின் ஆயுளும் தான்

தரையில் ஊற்றிய தண்ணீரையும்
தலையில் தருகின்றோம்
மழையின்றி மாண்டு வரும் மனிதர்களே!
மழை தரும் எங்களையும்
மாண்டுவிடச் செய்வது ஏனோ?

வரலாறு படிக்கட்டும்
இனிவரும் வரலாறு படிக்கட்டும்

“ மரம் என்ற ஒன்றுண்டு
மழை தரும் மகத்துவம் அதற்குண்டு
ஆறடியிலும் அது உண்டு
அறுபதடியிலும் வளர்வதுண்டு
கானம் இசைக்கும் இலையுண்டு
காயும் கனியும் தருவதுண்டு
தென்றல் தரும் சுகமுண்டு
அதில் தெய்வங்கூட உறைவதுண்டு
மரம் எனும் தெய்வத்தை
வேரோடு அழித்திட்ட
இரக்கமற்ற மனிதரும் அங்குண்டு”

என்று
வரலாறு படிக்கட்டும்
இனிவரும் வரலாறு படிக்கட்டும்

கருத்துகள் இல்லை: