குழந்தை மொழியின் பொருளும் மரபும்
சிவகங்கையில் இருந்து உறங்கான்பட்டி வந்திருந்தோம். சேய்மொழியன் வழக்கம் போல் நடை வண்டியை எடுத்துக்கொண்டு மிக வேகமாக ஓட்டி விளையாடினான். அவனுக்கு மட்டும் வெயில் தெரிவதில்லை. ஆனால் அவனது உடம்பு வியர்ப்பதும் வெயிலால் அவன் சோர்வடைவதும் எனக்குத் தெரியும். மாலை நேரத்தில் வண்டி ஓட்டலாம் என்றால் கேட்கமாட்டான். ஏதாவது சொல்லி வீட்டுக்குள் அழைத்து வருவேன். சில மணித்துளிகளில் அப்பா நல்வண்டி(நடை வண்டி) அப்பா நல்வண்டி. என்பான். இப்படியேத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருப்பான். என் கையைப்பிடித்து இழுப்பான். மீண்டும் அவனுடன் அவனுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருப்பேன். அவன் மிகழ்வாய் நடைவண்டியை ஓட்டி மகிழ்வான். வெயிலில் அவனைவிட அதிகமாக நான்தான் சோர்வடைவேன்.
மகிழ்ச்சியாக வண்டி ஓட்டிய அவனுக்கு இப்போது உடம்பில் ஏதோ அரிக்கத் தோன்றியிருக்கும் போல. அப்பா குளிக்கலாம். என்றான். சரிடா என்று அழைத்துக்கொண்டு வந்தேன். வழக்கம் போல் நான் தான் அவனை குளிக்க வைப்பேன். குளிக்க வைத்துக்கொண்டிருந்தேன். தலையில் ஷாம்பைப் போட்டுத் தேய்த்துக்கொண்டிருந்தேன். நுரை முகத்திற்கு வந்தவுடன் அப்பா குளிக்கலாம்பா... அப்பா குளிக்கலாம்பா... என்றான். என்னடா குளித்துக்கொண்டு தானடா இருக்கோம் பிறகென்னடா குளிக்கலாம் என்று கூறுகிறாய் என்று கூறியவாறே ஷாம்பை அலுத்தமாகத் தேய்த்துக்கொண்டிருந்தேன். அப்பா குளிக்கலாம்பா என்றான். எனக்கு ஒன்னும் புரியவில்லை. அப்போது அருகில் நின்று அவன் குளிப்பதற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த அவனது அம்மா அவனுக்குக் குளிக்கிறதுன்னா. தண்ணீ ஊத்துறதுப்பா அவனுக்குத் தண்ணீர் ஊத்தனும்மா என்றார்கள். அப்போதுதான் புரிந்தது மொழிக்கும் பொருளுக்குமான உறவு எத்தகையதென்று.
இயல்பாய்த் தோன்றும் மொழிகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏதோ ஒரு பொருளை உணர்த்த ஏதோ ஒரு சொல்லைப் பயன்படுத்துவது மழழை மொழியில் இயல்பாய் இருக்க. அவற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் பிறகு நமது மொழியைக் கற்பித்திருக்கின்றோம். இக்கற்பித்தல் மரபுசார்ந்த மொழியை எடுத்துரைப்பதாக உள்ளது. இது மொழியைக் காப்பதற்கான வழி என இலக்கணிகள் கருதியுள்ளனர். அதனால் தான்
“எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே” (நன். 388)
என்று இலக்கணம் செய்துள்ளனர்.
இவ்வாறே அவன் அவனது அம்மாவின் அலைபேசியை போட்டு என்றுதான் கூறுவான். அவனைப் பொறுத்தவரை அது போட்டோ எடுக்கும் கருவி எனவே அதற்கு போட்டோ என்றே பெயர் வைத்துவிட்டான். தமிழ் இலக்கண மரபு அவனுக்கு போடோ வேறு என்பதையும் போட்டு எடுக்கும் கருவி வேறு என்பதையும் எடுத்துரைக்கும் கடமையை வாழ்வியலோடு இணைந்து செய்கிறது. போட்டோ எடுக்கப்பயன்படுத்தினாலும் இது போட்டோ எடுக்கும் கருவி இல்லை என்பதும் இதன் முதன்மைப் பணி அலைபேசி என்பதும் பிறகு அவனே புரிந்துகொள்வான் அல்லது நம் மொழியின் மரபு அவனுக்கு அதைப் புரிய வைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக