மழலை மொழியில் - எண்ணும்மை
சேய்மொழியனுக்கு ஒரு வயதும் இரண்டு மாதங்களும் ஆகியிருந்தன. ஒவ்வொரு நாளும் அவனது அக்கா யாழ் பள்ளிக்குச் செல்லும் பொழுது அவனும் உடன் சென்று வருவது அவனது வழக்கம். அதாவது பள்ளி வரை சென்று அக்காவை விட்டுவிட்டு வருவான். வீட்டுக்கு வந்த சேய்மொழியனிடம் அக்கா எங்கடா என்று கேட்டால் அக்கா காணாப்போச்சு என்று கூறுவான். அக்கா ஸ்கூலுக்குப் போயிருக்கா என்று கூறுப்பா என்றுரைத்தாலும் அவன் அப்படிச் சொல்வதில்லை. வீட்டில் இல்லாத யாரையாவது கேட்டு அவர்கள் எங்கே என்று கேட்டால் அவன் அவர்களைக் கூறிக் காணாப் போச்சு. என்று கூறுவான் அவனது மழலை மொழி கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருப்பதால் அடிக்கடி அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்றாக இருந்தது.
ஒருநாள் வழக்கம் போல் அவனையும் அழைத்துக்கொண்டு பள்ளியில் யாழை விட்டுவிட்டு வந்தேன். என்னுடன் வந்த சேய்மொழியனிடம் இந்தக் கேள்வியை வீட்டுக்கு வந்த உடனே கேட்டேன். வழக்கம் போல அக்கா காணாப் போச்சு.. என்றான் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன. அவன் கூறிய பதிலில் வியப்பிருந்தது.
“அக்கா எங்கே? “அக்கா காணாப் போச்சு”
தாத்தா எங்கே? தாத்தா காணாப் போச்சு
அம்மா எங்கே? அம்மாவும் காணாப் போச்சு”
இப்பதிலில் வியப்பைத் தந்தது அம்மாவும் என்ற இந்த எண்ணும்மை. குழந்தை மொழியைப் பழகிக் கொண்டிருக்கும் வேளையில் சொல்லுடன் விகுதி மிக நுட்பமாக இணைவதைக் கண்டு வியந்தேன். ஒரு வயதுக் குழந்தையின் பேச்சில் இலக்கணக் கூறுகள் இணையும் இந்நிகழ்வு பதிவு செய்யப்பட வேண்டியதாகத் தோன்றியது.
மழலை மொழியில் - மூவிடப் பெயர்கள்
அன்று யாழ் வழக்கம் போல் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவர்களுக்குள் ஒரு விளையாட்டுப் பாடலைப் பாடினர். அப்பாடல்
“சாக்லேட் சாக்லேட் சீச் சீச் சீ
உங்கப்பாவும் எங்கப்பாவும்
போலீஸ்சு
உங்கம்மாவும் எங்கம்மாவும்
டீச்சர்ஸ்சு
உன் தம்பியும் என் தம்பியும்
குட்டித் தம்பி
உன் தங்கச்சியும் என் தங்கச்சியும்
குட்டித் தங்கச்சி
நீயும் நானும் பிரண்ட்ஸ்“
இப்பால் என்னுள் வியப்பைத் தந்தது. இப்பாடலுள் குழந்தைகளுக்கு சாக்லேட் சாப்பிடக் கூடாது என்பது குறிக்கப்படுகிறது. குடும்பத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான உறவு முறைப் பெயர்களும் அவர்களுடனான அன்பும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அது ஒரு புறம் இருக்க அதனையெல்லாம் தாண்டி இப்பாடல் எனக்கு இலக்கண விதிகளை நினைக்குக் கொண்டு வந்தன.
இப்பாடலுள் மூவிடப் பெயர்கள் இடம்பெறுகின்றன. நான் என்பது தன்மையாகவும் நீ என்பது முன்னிலையாகவும் அமைய, அப்பா அம்மா தம்பி தங்கச்சி முதலியோர் படக்கையாக அமைகின்றனர்.
மூவிடப் பெயர்களில் படர்க்கைப் பெயரை நாம் கூறும் பொழுது அப்பெயர்கள் திணை, பால், எண், இடம் முதலியவற்றை உணர்த்தும். ஆனால் தன்மைப் பெயரையும் முன்னிலைப் பெயரையும் கூறும் பொழுது அவைகள் ஒருமை பன்மை என்பனவற்றை மட்டுமே உணர்த்துமேயன்றி திணை, பால், எண், இடம் முதலியவற்றை உணர்த்தாது. இதனை நன்னூல்
“படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணைபால் அனைத்தும் ஏனை
இடத்து அவற்றொருமைப் பன்மை பாலே” (நன். 265)
இங்கு விளையாடும் குழந்தைகளைப் பார்க்காமல் அவர்கள் கூறும் நீயும் நானும் சொல்லை வைத்துக்கொண்டு அங்கு விளையாடிய குழந்தைகள் ஆணா, பெண்ணா என்றுரைக்க முடியாது. படர்க்கைப் பெயராய் வரும் அப்பா, அம்மா, தம்பி, தங்கை எனும் சொற்களைக் கேட்ட உடனே என்ன பால் என்றுரைக்க முடியும். எனினும் இங்கு இப்படர்கைப் பெயர்கள் உயர்திணை என்பன என்று துணிந்துரைக்க முடியாது. அஃறிணையைக் கூட நாம் உறவு முறைகளில் குறிப்பிடலாம். சங்கப்பாடல் நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று புன்னை மரத்தை உடன் பிறந்தவளாகக் கூறுகிறது. எனினும் அஃறிணையில் ஆண் பெண் எனும் பாகுபாடுகள் வழக்கில் இருக்கின்ற போதும் இலக்கணப் போக்கில் அஃறிணைக்கு ஒன்றன் பாலும் பலவின் பாலும் கூறப்பட்டுள்ளனவேயன்றி ஆண் பெண் பால்கள் கூறப்படவில்லை. அதன் அடிப்படையில் இங்கு குறிக்கப்படும் படர்க்கைப் பெயர்களும் திணை உணர்த்தியாகக்கொள்ளலாம். இருப்பினும் முறைப் பெயராக வரும் ஆண்மை முறைப் பெயரும் பெண்மை முறைப் பெயரும் இரு திணைக்கும் பொதுவாகும் என்று நன்னூல் 282ஆம் நூற்பாவில் கூறியிருப்பதும் இங்கு சிந்தனைக்குரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக